மொழிகள்

பாடம் 9 காணொளி

பாடம் 9

பிரார்த்தனை என்பது தேவனிடம் பேசுவது போன்றது.

மத்தேயு 6:9-13 இல் "கர்த்தருடைய பிரார்த்தனை" என்று அழைக்கப்படும் ஒரு எளிய உதாரணத்தை இயேசு முன்மாதிரியாக எடுத்துக் காட்டியுள்ளார். எப்படி பிரார்த்தனை செய்வது என்று அவரது நண்பர் ஒருவர் கேட்டதற்கான பதில் இந்த பிரார்த்தனையாகும்.

நண்பர்களுடன் நாம் செய்யும் வெவ்வேறு வகையான உரையாடல்களைப் போல பல்வேறு வகையான பிரார்த்தனைகள் உள்ளன. நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம். நமக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். நாம் பாதுகாப்பு, குணப்படுத்துதல், வலிமை மற்றும் ஞானம் ஆகியவற்றைக் கேட்கலாம். தேவனின் அன்பு, கருணை மற்றும் மன்னிக்கும் மனதிற்காக நாம் அவருக்கு நன்றி கூறலாம். நாம் விரும்புவதைப் பற்றி அவரிடம் கூறலாம். அவர் நமக்கு வழங்கியதற்கு நாம் அவருக்கு நன்றி கூறலாம். அல்லது நமது கவலைகள், அச்சங்கள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை அவரிடம் கூறலாம்.

இவை அனைத்தும் நல்லது!

நீங்கள் நேர்மையாக பிரார்த்தனை செய்தால் தேவன் அதனை நிறைவேற்றுவார். உங்கள் எண்ணங்களை அவர் அறிவார். உங்கள் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள். பணிவு, நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடன் அவரை அணுகுங்கள்.

கைகளை உயர்த்தி, மண்டியிட்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கண்களைத் திறந்து அல்லது மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். நடந்துக் கொண்டு, நின்றுக் கொண்டு, உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். காலை, அல்லது மாலை, அல்லது பிற்பகல் அல்லது நாள் முழுவதும் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களை மிகைப்படுத்திக் காண்பிக்க முயற்சிக்காதீர்கள். தேவன் ஆடம்பரமான வார்த்தைகளால் ஈர்க்கப்படமாட்டார். உங்களை விட அவருக்கு அதிகம் தெரியும். உண்மையாக இருங்கள். தேவனிடம் மரியாதையுடன் பேசுங்கள். அவர் உங்கள் பிரார்த்தனையை கேட்க விரும்புகிறார் என்றும், அவர் உங்களுடன் இருக்க விரும்புகிறார் என்றும் நம்புங்கள்.

நீங்கள் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். ஒன்றாக பிரார்த்தனை செய்வது முக்கியம்! அது நம்மை ஒன்று சேர்க்கிறது, அது தேவனை மகிழ்விக்கிறது.

சத்தமாக பிரார்த்தனை செய்யும் நபர்களைப் பார்த்து நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டாம். பிரார்த்தனை நம்மைப் பற்றியது அல்ல. நாம் தேவனிடம் நம் மனதை வெளிப்படுத்தும்போது அவருடன் நெருங்கி இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கூறினால், அது உங்களை விட அவர்களின் குணத்தைப் பற்றி அதிகம் கூறுகிறது. இது ஆணவத்தைக் காட்டுகிறது, ஆணவம் என்பது தீயது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் விடாமுயற்சியுடன் பிரார்த்தனை செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்தை திட்டமிட வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், பிரார்த்தனை உங்கள் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிடும். நீங்கள் திட்டமிடப்பட்ட பிரார்த்தனையை மேற்கொள்ள முடியவில்லை என்றால், தினமும் பதினைந்து நிமிடம் ஒதுக்குவதை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன், அதிகாலையில் உங்கள் நேரத்தை திட்டமிடுவது சிறந்தது. நீங்கள் இரவு நேரத்தில் சோர்வாகவோ, வேலையாகவோ அல்லது கவனச்சிதறலாகவோ இருக்கலாம் என்பதால் இரவு பொழுதில் நேரத்தை திட்டமிடுவதை விட காலை பொழுதில் திட்டமிடுவது உதவியாக இருக்கும். பிரார்த்தனை உங்கள் நாளின் போக்கை நல்ல முறையில் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.

உங்கள் பிரார்த்தனை நேரத்தை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். பிரார்த்தனைத் திட்டத்தை எழுதுவது உங்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் நீங்கள் எதைப் பற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்கும் நேரத்தில் இது உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

இங்கே ஒரு பரிந்துரைக்கப்பட்ட முறை கொடுக்கப்பட்டுள்ளது: முதலில், நீங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு அவருடைய நன்மை, மன்னிப்புத்தன்மை, மென்மைத்தன்மை மற்றும் அன்புக்கு நன்றி தெரிவிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அவருடைய விசுவாசம் மற்றும் வல்லமைக்காக அவரைப் புகழ்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். சிறிது நேரம் அமைதியாக இருங்கள், தேவன் உங்களிடம் பேசுவார் என்று காத்திருங்கள். உங்கள் நாளுக்காக உங்களை மேலும் பலப்படுத்த தேவனிடம் பிரார்த்தனை செய்ய மீதமுள்ள நேரத்தை செலவிடுங்கள்.

நீங்கள் பைபிளை பிரார்த்தனை வழிகாட்டியாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக, பைபிளை வாசியுங்கள், பிறகு நீங்கள் படித்ததைப் பற்றி தேவனிடம் பேசுங்கள், பைபிளில் நீங்கள் குழப்பமாக உணர்ந்ததை புரிந்துகொள்ள உதவுமாறு அவரிடம் கேளுங்கள்.

நல்ல பழக்கங்களைப் பழக்கப்படுத்த நேரம் எடுக்கும். செயல்முறையுடன் பொறுமையாக இருங்கள். நீங்களும் பொறுமையை கடைபிடியுங்கள். சோம்பேறியாக இருக்காதீர்கள்.

ஒவ்வொரு நாளும் விடாமுயற்சியுடன் பதினைந்து நிமிடங்கள் பிரார்த்தனையில் செலவிட்டப் பிறகு, பலர் பிரார்த்தனை நேரத்தை நீட்டிக்க விரும்பகிறார்கள். இது மிகவும் அற்புதம்! நேரத்தை வெவ்வேறு விதமாகப் பிரிப்பது உதவியாக இருப்பதைக் கண்டோம். அது நம்மை விரக்தி அடையாமல் பார்த்துக் கொள்கிறது.

பிரார்த்தனை என்பது கட்டாயம். காதலைப் போலவே, அது உண்மையாக இருக்க வேண்டும்.

நீங்கள் அதை முயற்சி செய்ய உறுதிபூண்டால் நீங்கள் ஆச்சரியப்படலாம், ஒரு மணிநேரம் பிரார்த்தனை செய்வது சாத்தியம் மட்டுமல்ல, அது சுவாரஸ்யமாகவும் இருக்கும்! ஏனென்றால் நமக்கு பிரார்த்தனை தேவை. எல்லாவற்றையும் விட தேவனுடன் நெருங்கிய உறவை விரும்புகிறோம். அந்த நெருக்கமான உறவு நம்மை மாற்றுகிறது.

தேவன் நம்மை பிரார்த்தனை செய்ய அழைக்கிறார். நாம் அவருடன் பேச வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். தேவனுடன் பேசுவது நம் ஆன்மாவை வேறு எதுவும் செய்ய முடியாத வகையில் திருப்திப்படுத்துகிறது. நாம் பிரார்த்தனை செய்வதை தவிர்க்கும் போது, அது நம்மையும் நாம் நேசிக்கும் மக்களையும் புறக்கணிப்பது போன்றது. தேவனுடன் நேரத்தை செலவிடுவோம், அவர் நம்மை தினமும் பலப்படுத்தி உற்சாகப்படுத்தட்டும்!

அவர் நம்மை திருப்திப்படுத்துவதையும் மகிழ்விப்பதையும் விரும்புகிறார். அவர் உங்களுடன் இருக்க விரும்புகிறார், இதன் மூலம் நீங்கள் அவரை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.

உங்கள் நாளில் தேவனுக்கான நேரத்தைத் திட்டமிடுங்கள், இல்லையெனில் உங்கள் நாள் முழுமையடையாது. நீங்கள் பிரார்த்தனை செய்வதை தவிர்த்தால், நீங்கள் சோர்வடைந்து, தனிமையான உணர்வுடன் தீமையில் ஈடுபடுவீர்கள். ஆனால் நீங்கள் விடாமுயற்சியுடன் பிரார்த்தனை செய்தால் நீங்கள் கற்பனை செய்ததை விட தேவன் உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.

தேவன் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும் ஆராயுங்கள்

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு பின்வரும் வழிகளில் பிரார்த்தனை செய்யுங்கள்: பாராட்டு; பாவத்தை ஒப்புக்கொள்ளுதல்; சங்கீத வாசிப்பு; நன்றி செலுத்துதல்; வழிபாடு; அவர் உங்களுடன் பேசும் வரை காத்திருங்கள்; உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்; மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்; சங்கீதம் 23 அல்லது மற்றொரு சங்கீதம் மூலம் பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் என்பவர் யார் என்று தியானம் செய்யுங்கள்; அவரைப் போல இருக்க உங்களைப் பலப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்; பின்னர் மேலும் புகழ்ச்சியுடன் நிறைவு செய்யுங்கள்.